search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுறவு சங்க தேர்தல்"

    கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #PMK #AnbumaniRamadoss
    சென்னை:

    பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டிலுள்ள மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தம் இன்று வரை இறுதி செய்யப்படவில்லை. கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கூட வழங்காமல் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசு இழுத்தடித்து வருவது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஐந்தாண்டுகளுக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இது தொடர்பாக அரசு பிரதிநிதிகளுக்கும், வங்கி ஊழியர் சங்கங்களுக்கும் இடையே இது குறித்து பேச்சுகள் நடத்தப்பட்டு ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவது வழக்கம்.

    அதன்படி மத்தியக் கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் 2015-ம் ஆண்டு டிசம்பருடன் முடிவடைந்து விட்ட நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தம் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அதன்பின்னர் 34 மாதங்கள் ஆகியும் இன்று வரை கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை.

    அதேபோல், நகரக் கூட்டுறவு வங்கிகளுக்கான ஊதிய ஒப்பந்தம் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தது. புதிய ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஊதிய ஒப்பந்தம் காலாவதியாகி 22 மாதங்கள் முடிவடைந்த போதிலும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தீர்மானிக்கப்படவில்லை.

    கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து தீர்மானிப்பதற்காக தமிழக அரசின் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குழுவினர் கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுக்களை நடத்தியது.

    கடந்த 6 மாதங்களுக்கு முன் நடைபெற்ற பேச்சுக்களின் அடிப்படையில் புதிய ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று தமிழக அரசின் சார்பில் உறுதி அளிக்கப்பட்ட போதிலும், அந்த உறுதிமொழி காப்பாற்றப்படவில்லை.

    புதிய ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படாததால் 23 மத்தியக் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் 17,000 பேருக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு 3 ஆண்டுகளாக கிடைக்கவில்லை.

    ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் அக்டோபர் 24-ந் தேதி கூட்டுறவு வங்கிகள் முன் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து 30-ந்தேதி தமிழகம் முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நவம்பர் 2-ந்தேதி உண்ணாநிலைப் போராட்டமும், 13ஆம் தேதி வேலைநிறுத்தமும் மேற்கொள்ளப் போவதாக கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர். ஆனால், இவை எதையுமே கண்டுகொள்ளாத தமிழக அரசு, கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறுத்து வருகிறது.

    கூட்டுறவு வங்கிகள் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அதனால் தான் புதிய ஊதிய ஒப்பந்தத்தை இன்னும் இறுதி செய்ய முடியவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    கூட்டுறவு வங்கிகள் கடுமையான நிதி நெருக்கடியில் தவிப்பதாகக் கூறப்படும் சூழலில் தான் தமிழக அரசு அவசர அவசரமாக கூட்டுறவு சங்கத் தேர்தல்களை நடத்தி, அ.தி.மு.க.வினரே வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது.

    அவர்களுக்கு மகிழுந்து உள்ளிட்ட சலுகைகளை தமிழக அரசு வாரி இறைக்கிறது. ஆனால், கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் மட்டும் இல்லாத காரணங்களைக் கூறி இழுத்தடித்து வருவது மிக மோசமான அநீதியாகும்.

    தமிழக ஆட்சியாளர்களின் இந்த அநீதி இனியும் தொடரக்கூடாது. கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும். அத்துடன் புதிய ஊதிய விகிதத்தின்படி கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையையும் அரசு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். #PMK #AnbumaniRamadoss
    வேலூர், திருவண்ணாமலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Chennaihighcourt
    சென்னை:

    காஞ்சீபுரம், திருவள்ளூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் தேர்தலில் அதிக அளவில் முறைகேடு நடந்துள்ளது என்று கூறி பலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    அதேபோல, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலையின் கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிக அளவிலேயே முறைகேடு நடந்து இருப்பதாக கூறி இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று சிலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    வேலூர், திருவண்ணாமலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல், சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம் கூட்டுறவு சங்கங்களில் தேர்தல், குடவாசல் விவசாய கூட்டுறவு சங்கத் தேர்தல் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களின் தேர்தலில் ஏராளமான முறைகேடு நடந்துள்ளது என்றும், தங்களது வேட்புமனுவை பெறாமல், ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக தேர்தல் அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் கூறி ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் இந்த தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் விசாரித்தார். பின்னர், இன்று (வெள்ளிக்கிழமை) இந்த கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். #Chennaihighcourt
    கூட்டுறவு சங்க தேர்தலில் ஓட்டு சீட்டை கிழித்து வீசிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் கூட்டுறவு சங்கத்துக்கு நேற்று தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    தேர்தல் அலுவலர் கதிர்வேல் மேற்பார்வையில் ஓட்டுப்பதிவு தொடங்க இருந்தபோது திருமோகூரை சேர்ந்த ரமேஷ், புதூர் தாமரைப்பட்டியை சேர்ந்த போஸ், மகாராஜன் ஆகிய 3 பேர் அத்துமீறி உள்ளே நுழைந்து தகராறில் ஈடுபட்டனர்.

    தேர்தல் அதிகாரியை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதுடன் அங்கிருந்த ஓட்டு சீட்டுகளையும் கிழித்து எறிந்தனர்.

    இதுகுறித்து கதிர்வேல் ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரகுரு வழக்குப்பதிவு செய்து ரமேஷ், போஸ், மகாராஜன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
    திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் காமராஜ் வாழ்த்து தெரிவித்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் மணலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் கட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய 2 வங்கிகளுக்கும் நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது.

    இதில் மணலி கூட்டுறவு வங்கி நிர்வாக்ககுழு உறுப்பினர் பொறுப்புக்கு அ.தி.மு.க. தரப்பில் 11 பேரும், தி.மு.க. கூட்டணி தரப்பில் 11 பேரும் சுயேட்சைகளாக 8 பேரும் ஆக மொத்தம் 30 பேரும், கட்டக்குடி கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு அ.தி.மு.க சார்பில் 11 பேரும் தி.மு.க. கூட்டணி சார்பில் 11 பேரும் மொத்தம் 22 பேரும் போட்டியிட்டனர்.

    இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    இதில் மணலி கூட்டுறவு சங்கத்தில் நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட 10 பேர் வெற்றி பெற்றனர். அதிமுக சார்பில் போட்டியிட்ட பாலசுப்ரமணியன் 701 வாக்குகள், மாரிமுத்து 700 வாக்குகள், ராஜேந்திரன் 661 வாக்குகள், ராமகிருஷ்ணன் 649 வாக்குகள், ராமலிங்கம் 667 வாக்குகள், சிங்காரவேலு 641 வாக்குகள், கமலா 711 வாக்குகள், எம்.சுமித்ரா 697 வாக்குகள், ஆர்.சுமத்திரா 705 வாக்குகள், முருகேசன் 756 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். இதன்மூலம் மணலி கூட்டுறவு சங்க நிர்வாகக்குழுவை அதிமுக கைப்பற்றியது.

    கட்டக்குடி கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாசிலாமணி 250 வாக்குகள், இளமாறன் 239 வாக்குகள், கலியபெருமாள் 254 வாக்குகள், அமுதாதேவி 243 வாக்குகள், பிச்சைக்கண்ணு 242 வாக்குகள், டேவிட்ராஜ் 241 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று பெரும்பான்மை இடங்களை பிடித்தனர். மீதமுள்ள இடங்களில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பரிமளா 214 வாக்குகள். பவானி 213 வாக்குகள், கலா 225 வாக்குகள், தங்கமணி 258 வாக்குகள், அருமைராஜ் 250 வாக்குகள் பெற்று தேர்வு செய்யப்பட்டனர். பெரும்பான்மை இடங்களை அதிமுக பெற்றுள்ளதால் கட்டக்குடி கூட்டுறவு சங்கமும் அதிமுக வசம் வந்தது.

    கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் காமராஜ் வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரண்டு கூட்டுறவு சங்கங்களுக்கும் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் வருகிற 8-ந் தேதி நடைபெறுகிறது.

    ஒட்டன்சத்திரம் அருகே வாக்கு பெட்டிக்குள் மை ஊற்றியதால் கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது. #CooperativeElection

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே ஓடைப்பட்டி கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் தலைவர், துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

    மொத்தம் 70 பேர் வாக்களிக்க இருந்த நிலையில் 69 நபராக ஓடைப்பட்டி வெங்கடாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் வாக்களிக்க வந்தார்.

    அப்போது திடீரென வாக்கு பெட்டிக்குள் மையை ஊற்றினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தேர்தல் அதிகாரி சுப்பிரமணியை பிடித்து விசாரணை நடத்தினர்.

    மேலும் இது குறித்து அம்பிளிக்கை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சுப்பிரமணியை கைது செய்தனர். 68 பேர் வாக்களித்த நிலையில் திடீரென மை வீசப்பட்டதால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது. எனவே இந்த தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும், மற்றொரு நாள் நடைபெறும் எனவும் தேர்தல் அதிகாரி தெரிவித்தார். #CooperativeElection

    கூட்டுறவுச் சங்கங்களுக்கான தலைவர், துணைத்தலைவர் தேர்தல் வருகிற 11-ந்தேதி நடத்தப்படும் என்று தமிழக கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #CooperativeSocietiesElection

    சென்னை:

    தமிழக கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கூட்டுறவு தேர்தலின் 5 ஆண்டு பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது.தொடக்கச் சங்கங்கள், மத்திய சங்கங்கள் 5 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம் வகுத்தது.

    முதல் அடுக்கில் வரும் 18,465 தொடக்கக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு முதல்கட்டத்தில் 12.03.2018 முதல் 7.05.2018 வரை 4 நிலைகளாக தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின் அடிப்படையில் 4 நிலைகளிலும் தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

    இந்தநிலையில் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் உள்ளது உள்ளபடியே நிறுத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் 9.04.2018 நாளிட்ட ஆணைக்கிணங்க அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன.

    இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்ததின் பேரில் உச்ச நீதிமன்றம் மதுரை அமர்வின் அறிவித்தல் தவிர்த்த இதர அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் நடத்திட ஆணை பிறப்பித்தது.

    அதன் அடிப்படையில் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளையும் ஆணையம் மீண்டும் தொடர்ந்து நடத்தியது. வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் மட்டும் அறிவிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றம் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு திரும்ப அனுப்பியது.

    நிறுத்தப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவித்தல் ஆகியவற்றின் மீதான தடையினை விலக்கி தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் 3.08.2018 அன்று ஆணையிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் வழக்கு நிலுவையிலுள்ள சங்கங்களுக்கு மட்டும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    புகார்கள் மற்றும் சட்ட ஒழுங்கு மற்றும் இதர காரணங்களினால் தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்த, ரத்து செய்யப்பட்ட, ஒத்தி வைக்கப்பட்டிருந்த, பாதியில் நிறுத்தப்பட்ட நிலுவையிலிருந்து தொடர தேர்தல் ஆணையத்தால் ஆணையிடப்பட்டுள்ள சங்கங்கள் தவிர்த்து அனைத்து சங்கங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு புதிய நிர்வாகக்குழு தேர்தல் முடிவுகளை உடன் அறிவித்திட அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

    வருகிற 6-ந்தேதி 2-ம் நிலையில் உள்ள சங்கங்களுக்கு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். 3-ம், 4-ம் நிலையில் உள்ள சங்கங்களுக்கு நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் 7-ம் தேதி அறிவிக்கப்படும். 3 மற்றும் 4 நிலையிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கான தலைவர், துணைத்தலைவர் தேர்தல் வருகிற 11-ந்தேதி நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.#CooperativeSocietiesElection

    கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. #CoOperativePolls #IrregularitiesInPolls
    சென்னை

    தமிழகத்தில் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்திருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்கில் அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வந்த உயர்நீதிமன்றம், இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

    கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் ராஜேஸ்வரன், ராமநாதன், வெங்கட்ராமன், ராஜசூர்யா ஆகியோரை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், 2 வாரங்களில் நீதிபதிகள் தலைமையிலான குழுக்களை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    “குழு அமைக்கப்பட்ட 7 நாட்களுக்குள் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கலாம். இந்த குழுக்களில் இணை பதிவாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களும் இடம்பெறவேண்டும். விசாரணையின் முடிவில் முறைகேடு கண்டறியப்பட்டால் தேர்தலை ரத்து செய்ய குழுவுக்கு அதிகாரம் உண்டு. வழக்கு தொடராத சங்கங்களுக்கு தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை இல்லை. தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிடலாம்’’ என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன. #CoOperativePolls #IrregularitiesInPolls
    கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை 23-ந்தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    சென்னை:

    தி.மு.க. கொறடா சக்கரபாணி சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வந்தன. இதில் ஆளும் கட்சியினருடன் சேர்ந்து அரசு அதிகாரிகள் மிகப்பெரிய முறைகேடுகளை செய்கின்றனர்.

    ஆளும் கட்சியை சேர்ந்தவர்களை தேர்தல் இல்லாமலேயே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கின்றனர். அதே நேரம், தி.மு.க. உள்ளிட்ட பிற கட்சியினரின் மனுக்களை அவர்கள் பரிசீலிப்பதே இல்லை. எனவே, கூட்டுறவு சங்கங்களின் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    அதேபோல, பல்வேறு மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு நடத்தப்படும் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒருசிலரும், கூட்டுறவு சங்கத் தேர்தலை நிறுத்தி அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி வேறு சிலரும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த வழக்குகள் எல்லாம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வக்கீல்கள் பலர் எழுந்து, அரசு உள்நோக்கத்துடன் இந்த கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்துகிறது. ஒரு கூட்டுறவு சங்கத்தில் ஆளும் கட்சியை சேர்ந்தவர் வெற்றிப் பெறவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அந்த தேர்தலையே அதிகாரிகள் ரத்து செய்துவிட்டனர் என்று வாதிட்டனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், அரசு பிளீடர் ராஜகோபாலன் ஆகியோர் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். #HighCourt #CooperativeSocietyElection
    கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #TNMinister #SellurRaju
    சென்னை:

    கூட்டுறவுத்துறை ஆய்வுக் கூட்டம் சென்னையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூட்டுறவுத்துறையினர் மாவட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பயிர்க்கடன், உரம் வினியோகம், ஆதிதிராவிட, பழங்குடி மக்களுக்கு அரசின் உதவிகள் முறையாக வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது.

    கூட்டுறவு சங்கம் அ.தி.மு.க. அரசால் உரிய முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சங்கத்துக்கு அரசியல் இல்லை. இது காலம் காலமாக நடந்து வருகிறது. இந்த முறைதான் சக்கரபாணி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது எதுவும் கூற முடியாது. கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடக்கவில்லை.


    18 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வில் இணைவது பற்றி முதல்-அமைச்சர் ஏற்கனவே கூறிவிட்டார். அதனால் நான் எதையும் கூற விரும்பவில்லை. கூட்டுறவு அச்சகங்களில் பழைய மிஷின்கள் இருக்கிறது. அதனை மாற்றி நவீன ரக மிஷின்கள் வாங்கி வருகிறோம்.

    அ.தி.மு.க. வந்த பிறகுதான் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 21 சதவீத சம்பள உயர்வு வழங்கியது. இது ஊழியர்களுக்கு தெரியும். 5 ஆண்டு முடிவுற்று இருக்கிறது. சம்பள உயர்வு குறித்து முதல்வரே அறிவிப்பார். மக்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை ஒரு போதும் இந்த அரசு எடுக்காது.

    நடப்பாண்டில் 8 ஆயிரம் கேடிக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்ணை பசுமை கடைகள் மூலம் ரூ.102.79 கோடிக்கு காய்கறிகளை விற்பனை செய்யப்பட்டுள்ளது. 281 அம்மா மருந்தகம் மூலம் ரூ.700 கோடி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவிரைவில் 61,851 விவசாயிகளுக்கு ரூ.417 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #SellurRaju
    தொண்டி அருகே கூட்டுறவு சங்க தேர்தல் முன்விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். #LocalBodyElections ##CooperativeUnionElection

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேது. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பட்டாணி என்பவருக்கும் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக விரோதம் இருந்தது.

    இந்த முன்விரோதத்தில் அடிக்கடி மோதலும் நடந்துள்ளது. நேற்று பட்டாணி தரப்பை சேர்ந்த ஜெயக்குமார் (வயது32) அங்குள்ள கடற்கரை பகுதியில் படுத்து இருந்தார்.

    இன்று அதிகாலை அங்கு 10 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த ஜெயக்குமாரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு ஜெயக்குமாரின் தம்பி வசீகரன் (27), உறவினர் விஜயராஜன் (27) ஆகியோர் அங்கு வந்தனர். அவர்களையும் மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது.

    இதில் பலத்த காயம் அடைந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நளாயினி, ஏட்டு மாரி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று ஜெயக்குமாரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை சம்பவத்தில் சேது தரப்பினர் தான் ஈடுபட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அந்த தரப்பை சேர்ந்த 2 பேர் காயங்களுடன் திருவாடானை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #LocalBodyElections ##CooperativeUnionElection

    கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #HighCourt #TamilnaduGovernment #CooperativeUnionElection
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.  இந்த தேர்தல் நடைமுறையில் முறைகேடுகள் நடப்பதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டது.

    சென்னை புதுப்பேட்டை கூட்டுறவு சங்கம், சென்னை மாநகர போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக சென்னை ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

    அதில், தேர்தலின்போது, போலி வாக்காளர் அட்டைகளை தயாரித்து, பலர் கள்ள ஓட்டு போட்டதாகவும், கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் இல்லாதவர்களை கொண்டு தேர்தல் நடத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் நேற்று காலையில் விசாரித்தார்.

    பின்னர், ‘கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் தொடர்பாக ஏராளமான வழக்குகள் தினமும் தொடரப்படுகின்றன. ஏராளமாக முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றன. எனவே, இந்த வழக்குகளின் விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைக்கிறேன். அப்போது கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்தும் மாநில தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

    இதன்படி, பிற்பகலில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்தபோது, ஆணையர் ராஜேந்திரன் ஆஜராகவில்லை. அவருக்கு பதில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் கூடுதல் செயலாளர் வாசுகி ஆஜரானார்.

    அப்போது கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையத்தின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ‘கூட்டுறவு தேர்தலில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. சட்டத்துக்கு உட்பட்டுத்தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. விதிகளை மீறி செயல்படவில்லை. விண்ணப்பங்கள் எல்லாம் தேர்தல் விதிகளின்படி பரிசீலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்படுகிறது’ என்று வாதிட்டார்.

    மனுதாரர்கள் சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் வாதிட்டார்கள். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    அரசின் நலத்திட்டங்கள் எல்லாம் ஏழை, எளிய பொதுமக்களுக்கு கொண்டு செல்வதில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏழை, எளிய மக்களுக்காக இந்த கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டன.

    ஆனால், அப்படிப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் எல்லாம் அழியும் நிலையில் உள்ளது. இது வேதனை அளிக்கிறது. அழியும் நிலையில் உள்ள இந்த சங்கங்களை மேம்படுத்தவேண்டும். அதற்காக அந்த கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும். சரியான முறையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் விதிகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும்.

    ஆனால், கூட்டுறவு சங்க தேர்தலில் பல முறைகேடுகள் நடக்கிறது. சில தேர்தல் அதிகாரிகள் தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுடன் கூட்டுச் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். விதிகளை மீறி, சட்டவிரோதமாக செயல்படுகின்றனர் என்று மனுதாரர்கள் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

    எனவே, இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடும் தேர்தல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த தேர்தல் அதிகாரிகள் மீது தேர்தல் நன்னடத்தை விதிகளின் படியும், கிரிமினல் நடவடிக்கை, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் தன்னுடைய கடமையில் இருந்து தவறும்போது, அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடும்.

    எனவே, கூட்டுறவு சங்க தேர்தலில் நடந்த முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்கள், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்தும் ஆணையத்திடம் புதிய புகாரை உடனே கொடுக்கவேண்டும். அந்த புகாரை பெற்றுக்கொண்ட பின்னர், தேர்தல் ஆணையம் வெளிப்படையான, நேர்மையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

    தேவைப்பட்டால், புகார் கொடுத்தவரை நேரில் அழைத்து விசாரிக்கலாம். இதன்பின்னர், அந்த புகார் மனு மீது 8 வாரத்துக்குள் இறுதி முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும்.

    முடிவு எடுக்கப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் தேர்தல் முடிவை வெளியிடலாம். இவ்வாறு எடுக்கப்படும் முடிவுகளாலும், தேர்தல் முடிவு வெளியிட்டதாலும், யாராவது பாதிக்கப்பட்டால், அவர்கள் தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டம், பிரிவு 90(1)ன் கீழ் தமிழக அரசிடம் புகார் மனு கொடுத்து முறையிடலாம்.

    இந்த புகார் மனுவை 6 வாரத்துக்குள் தமிழக அரசு பரிசீலித்து, தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி தன் உத்தரவில் கூறியுள்ளார்.  #CooperativeUnionElection #HighCourt #Tamilnews 
    ×